கமலா ஹாரிசிடம் இருந்த அணு ஆயுதங்களுக்கான அதிகாரம்

அமெரிக்காவின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம், இந்தியாவை பூர்வீகமாக உடைய துணை அதிபர் கமலா ஹாரிசிடம், 85 நிமிடங்கள் இருந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள், அதைப் பயன்படுத்த உத்தரவிடக் கூடிய அதிகாரம், நாட்டின் அதிபரிடம் இருக்கும். ‘நியூக்ளியர் புட்பால்’ என்று அழைக்கப்படும், கால்பந்து அளவிலான இந்த சாதனம், அமெரிக்க அதிபருடன் எப்போதும் இருக்கும். அவருடன் இருக்கும் உயர் ராணுவ அதிகாரி இதை எப்போதும் சுமந்து செல்வார்.

அதுபோல முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க தேவையான தகவல்கள் உள்ள, ‘பிஸ்கட்’ என்றுஅழைக்கப்படும் கையடக்க அட்டையும் அதிபரிடமே எப்போதும் இருக்கும்.

இந்த கால்பந்தை இதுவரை பொதுமக்கள் எவரும் பார்த்ததில்லை. கடந்த 1963ல், அப்போதைய அதிபர் ஜான் எப் கென்னடி, மசாசூட்சுக்கு தன் குடும்பத்துடன் சென்றபோது, இந்த கால்பந்து உள்ள பை படம் எடுக்கப்பட்டது.

இதைத் தவிர, மிக மிக ரகசியமாக இந்த கால்பந்து மற்றும் பிஸ்கட் வைத்திருக்கப்படும்.
இதேபோல் நினைத்த நேரத்தில், தன்னிச்சையாக அணு ஆயுதத்தை ஏவும்படி அதிபர் உத்தரவிட முடியாது.பல்வேறு ரகசிய குறியீடுகள், பல கட்டங்களில் பயன்படுத்தப்பட்டு, பல நிலைகளைக் கடந்த பின்பு தான் உத்தரவு செயல்படுத்தப்படும்.அதிபர் இல்லாத நிலையில், இந்த கால்பந்து துணை அதிபரிடம் வழங்கப்படும்.

கடந்தாண்டு நவ., 19ல் பெருங்குடலில் சிறிய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மருத்துவமனையில் இருந்தார். அப்போது கால்பந்து மற்றும் பிஸ்கட், துணை அதிபர் கமலா ஹாரிசிடம் வழங்கப்பட்டது. கமலா ஹாரிசிடம், அவை, 85 நிமிடங்கள் இருந்தன.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் துணை அதிபராக உள்ளதால், அந்த நாட்டின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம், பெண் ஒருவரிடம் இருந்துள்ள தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir