மரபணு மாற்றப்பட்ட புதிய வகை நெல் விதை வருகிறது

மரபணு மாற்றப்பட்ட புதிய வகை நெல் விதையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நெல் விதையை ஒரு முறை நடவு செய்தால் போதும், நிரந்தரமாக மகசூல் செய்ய முடியும் என்று அந்நாட்டு ஆராய்ச்சி நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். உலகளவில் வேளாண் சாகுபடியில் தினமும் புதிய புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து வருகின்றனர். குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக் கூடிய தானியங்கள், பயிர்களை பயிரிட முனைப்பு காட்டுகின்றனர்.

அந்த வகையில் 1980ம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் நடவு செய்யாமல் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கண்டுபிடித்தனர். அதாவது, ஒரு விதையின் அடிப்படை பண்புகளை மாற்றாமல், அதன் மூலக்கூறுகளில் சில மாற்றங்களைச் செய்து அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதே மரபணு மாற்ற தொழில்நுட்பம் ஆகும். பாரம்பரிய சாகுபடி முறையில் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என்பதால், இந்த உயிரி தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது வரை கோதுமை, சோளம், அரிசி போன்ற தானியங்கள் சோதனை முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் அரிசி விதையை (நெல்) ஒரு முறை விதைத்துவிட்டால், பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து அறுவடை செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையின்படி விவசாயிகள் ஒவ்வொரு முறையும் நெல் விதைகளை நடவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை அறுவடை செய்யப்பட்ட பின்னர், அதே இடத்தில் மீண்டும் அந்த நெற்பயிர் வளர்ந்து வரும் திறன் கொண்டதாக இருக்கும்.

மற்ற தாவர வகைகளை (செடி, மர வகை) போன்று), இந்த வகை நெற்பயிரில் இருந்து நெல்லை உற்பத்தி செய்ய முடியும். மரபணு ரீதியாக கண்டறியப்பட்ட இந்த வகை நெல் விதைகளை பயன்படுத்த, விவசாயிகளுக்கு சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சீனாவின் ஷென்சென் பிஜிஐ ரிசர்ச் நிறுவன தலைமை விஞ்ஞானி லியு ஹுவான் கூறுகையில், ‘புதிய வகை நெல் விதை கண்டுபிடிப்பு என்பது உலகளவில் விவசாய துறையில் புரட்சிகரமான திட்டமாகும். இந்த வகை நெல் விதைகளை வயலில் ஒரு முறை விதைத்தால் போதும். அதிலிருந்து தொடர்ந்து நெல்லை சாகுபடி செய்யலாம்.

எங்களது ஆராய்ச்சியின் முடிவில், பாரம்பரிய நெல் வகைகளை காட்டிலும், இந்த வகை நெல்லானது இரண்டு மடங்கு மகசூலை தரும். சுற்றுச்சூழலுக்கும் நல்லது. இன்றைய நிலையில் விவசாயத்திற்கு டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் கிடைக்கவில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக இந்த புதிய வகை நெல் சாகுபடி உதவும். குறைந்தளவு விவசாய நிலத்தை மட்டுமே பயன்படுத்தி நிரந்தரமாக நெல் சாகுபடி செய்ய முடியும் என்பதால், பயன்படுத்தாத விளைநிலங்களை கூட மீண்டும் பயன்படுத்த முடியும். இதன்மூலம் அதிகளவில் நெல் உற்பத்தி செய்ய முடியும். சீன விவசாய அமைச்சகம் இந்த புதிய நெல் வகைகளை ஊக்குவிப்பதில் மிகவும் உறுதுணையாக உள்ளது’ என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir