புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றும் செயற்பாட்டுக்கு ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் கண்டனம்

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றும் செயற்பாட்டுக்கு எதிராக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கை ஒன்று  ஏறாவூர் நகர் பிரதேசசெயலகத்தில் கையளிக்கப்பட்டது.

இதன் போது ஏறாவூரில் உள்ள பல நிறுவனங்களும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டதுடன் இந்த அமைப்பின் தலைவர் முகைதீன் அவர்களினால் குறித்த கண்டன அறிக்கை உதவிப் பிரதேச செயலாளரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.

இந்தக்கண்டன அறிக்கையில், கிழக்கு மாகாண ஆளுனரின் கடிதத்தின்படி புன்னைக்குடா வீதியின் பெயரை “Elmis Walgama Road” என பெயர் மாற்றயிருப்பதாக நாங்கள் அறிவதாகவும், ஊரிலிருக்கின்ற அனைத்து நிறுவனங்களும், ஊர் மக்களும் இவ்விடயம் அறிந்து மிகவும் கவலையடைகின்றார்கள் என்றும்.

ஏறாவூரின் அடையாளமாகக் காணப்படுகின்ற இவ்வீதியானது புன்னைக்குடா வீதி என்றே எல்லோராலும் அறியப்பட்ட புன்னைக்குடா கடற்கரைக்கு செல்லும் வீதியாகும் என்றும், மூன்று இன மக்களும் இவ்வீதியில் வசித்து வருவதோடு, ஊரில் உள்ள நிறுவனங்களினதும், வியாபார நிலையங்களினதும் முகவரியாகக்கூட இவ்வீதி காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், நீண்டகாலமாக புன்னைக்குடா வீதியென்று அழைக்கப்பட்ட இதன் பெயரை “EImis Walgama Road” என பெயர்மாற்றம் செய்வதனை ஊரிலுள்ள அனைத்து நிறுவனங்களினதும் சார்பாக நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: digital