நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரிலிருந்து முழுமையாக விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்
இந்த வருடத்துக்கான ஐ.பி.எல். தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் விளையாடிய கேன் வில்லியம்சன், 13 வது ஓவர் பந்துவீச்சின் போது எல்லைக் கோட்டுக்கருகே பந்தைத் தடுக்க முயன்றபோது வலது காலில் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் அந்தப் போட்டியிலன் மீதி ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. கேன் வில்லியம்சலுக்கு பதிலாக சாய் சுதர்சன் இந்தப் போட்டியிலே விளையாடியிருந்தார்.
இதேவேளை, வில்லியம்சனுடைய காயத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இந்தத் தொடரில் விளையாட முடியாது போகும் என்று அவருக்கு தெரிவித்திருக்கிறார்கள். எனவே, சிகிச்சைக்காக நாடு திரும்பவிருக்கும் கேன் வில்லியம்சன் அடுத்ததாக நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து விளையாடவிருக்கும் ரி-20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களிலும் விளையாட முடியாத நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேன் வில்லியம்சனுடைய இழப்பு இந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டான்ஸ்க்கு ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு வருடங்களாக முழங்கைக் காயத்தால் அவதிப்பட்டு வந்த கேன் வில்லியம்சன் அண்மையில்தான் அதற்கான சிகிச்சைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு வந்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.