அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளிதான் முதல்வரின் பிறந்தநாள் விழாவில் அ.ராசா எம்.பி. பேச்சு!

அதானி குற்றவாளி என்றால் பிரதம மந்திரியும் குற்றவாளிதான். இதைக் கூறியதற்காக என்னுடைய பதவியைப் பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளேன், என எம்.பி ஆ.ராசா பேசியிருக்கிறார்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நேற்று நடைபெற்றன. இதில் தி.மு.க. வின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்,

“வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிகளோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. அப்போது கலைஞர் காவிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னால் பல ஆபத்துக்கள் உள்ளன. இதை யாராலும் மறுக்க முடியாது. உதாரணமாக, ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா உச்சகட்டத்தில் இருந்ததால் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்தது. அதனை அவர் போக்கினார். அதனைத் தொடர்ந்து வெள்ளம் வந்தது. பத்து தினங்களுக்குள் சென்னையை மீட்டெடுத்தார்.

அதேபோல தேர்தலில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் கஜானாவைக் காலி செய்து விட்டனர் என்பது தெரியவந்தது. தற்போது அதனைச் சீர் செய்து, கொடுத்த வாக்குறுதியான 1,000 ரூபாய் உரிமைத் தொகையை வழங்குவதற்கும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். தொடர்ந்து எதிரிகளோடுதான் ஸ்டாலின் களமாடிக் கொண்டிருக்கிறார், என்று ஆ.ராசா தனது உரையில் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 80 கோடி ரூபாய் மதிப்பில் பேனா தேவையா? என்று எடப்பாடி கேட்கிறார். அவருக்கு என்ன தகுதி உள்ளது இப்படிக் கேட்பதற்கு? குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு அவர்கள் நினைவுச் சின்னம் கட்டினர். அதை யாராவது எதிர்த்துக் கேட்டார்களா? ஜெயலலிதா சொத்து வழக்கில் சசிகலாவைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் பா.ஜ.க. வின் எம்.பி.க்களும் உண்மையைப் பேச மறுக்கின்றனர். பொய்யாகத்தான் பேசுகின்றனர். என் மீது 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தினார்கள். அதற்காக பாராளுமன்றத்தையும் பா.ஜ.க. முடக்கியது. அந்தக் குற்றச்சாட்டின் மீது நீதிமன்றத்தில் நானே நேரடியாக வாதாடி நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தேன்.

அதே போன்று அதானி விவகாரத்தில் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டிற்கு மோடி பதில் கூறாததன் மர்மம் என்ன? அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளிதான். இதைக் கூறியதற்காக என் மீது வழக்குத் தொடர்ந்து, தண்டனை வாங்கிக் கொடுத்து என்னுடைய பதவியைப் பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்குச் செல்லத் தயாராக உள்ளேன்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் மொழியையும் மக்களையும் தமிழினத்தையும் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், என்றும் ஆ.ராசா குறிப்பிட்டிருக்கிறார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply