சத்தீஸ்கரில் தெருநாய்கள் கடித்ததில் 5 வயதுச் சிறுமி பரிதாபமாகப் பலி

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தெருநாய்கள் தாக்கியதில் 5 வயதுச் சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் கொரியா என்ற மாவட்டத்தில் பய்குந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. 5 வயதுச் சிறுமியான இவர், கடந்த 7ஆம் திகதி காலை 6 மணி அளவில் இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது பைகுந்த்பூரில் உள்ள மார்கதர்ஷன் பள்ளிச் சாலை அருகே, அங்கிருந்த தெரு நாய்கள் சிறுமியைச் சூழ்ந்து கொண்டு தாக்கிக் கடித்துள்ளன. இதில் சிறுமி கடுமையான காயங்களுக்கு ஆளான நிலையில், தகவல் அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நாய்கள் கடுமையாக தாக்கியதில்தான் சிறுமி உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது, என பைகுந்த்பூர் கோட்வாலி காவல் நிலைய நிலைய அதிகாரி அஸ்வனி சிங் கூறியுள்ளார். பின்னர், பொலிசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதேபோன்று கடந்த பெப்ரவரி மாதத்தில் ஹைதராபாத் அம்பர்பெட் பகுதியில் பிரதீப் என்ற 5 வயதுச் சிறுவனும், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த 12 வயதுடைய நூராஸ் என்ற சிறுவனும் தெரு நாய்கள் கடித்து இறந்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply