பெளத்த மதத் தலைவரான தலாய் லாமா, ஒரு சிறுவனுக்கு வாயில் முத்தம் கொடுத்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் தஞ்சமடைந்து வாழ்ந்துவருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் தன்னிடம் ஆசீர்வாதம் பெற வந்த இந்தியச் சிறுவனின் வாயில் தலாய் லாமா முத்தம் கொடுத்துள்ள காணொளி வெளியாகியுள்ளது. அத்தோடு சிறுவனின் நாக்கல் தன் நாக்கைத் தொடும்படி அவர் கூறுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து, தலாய் லாமாவின் செய்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது சிறுவர்கள் மீதான வன்முறை என்றும். பாலியல் ரீதியிலான அத்துமீறலென்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
இதையடுத்து, தலாய் லாமா அறிக்கையொன்றின் மூலம் நடைபெற்ற சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார். வழமையாக தான் சந்திக்கும் நபர்களிடத்தில் கள்ளங்கபடமற்ற முறையில் எந்தவித உள்நோக்கமுமின்றி இவ்வாறு விளையாடுவது இயல்பானது என்றும், எனினும் குறித்த சம்பவமானது மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால், சிறுவன், அவனது குடும்பத்தினர், மற்றும் அவர்களுடைய நண்பர்களிடத்திலும் தான் மன்னிப்பைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.