ஊடக ஆளுமை மாணிக்கவாசகம்; நினைவுப் பதிவு

இலங்கைத் தமிழ் ஊடகத்துறை ஆளுமைகளில் ஒருவரான மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் வவுனியாவில் இன்று அதிகாலை காலமானாா் என்ற செய்தி தமிழ் ஊடகத்துறையினருக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.

போா்க் காலத்திலும், போருக்குப் பிந்திய காலத்திலும் கடுமையான அச்சுறுத்தல்கள், உயிராபத்துக்களின் மத்தியிலும் உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதில் அா்ப்பணிப்புடன் செயற்பட்டவா் மாணிக்கவாசகம். மக்களின் அவலங்களை வெளிக்கொண்டுவருவதன் மூலமாக அவற்றுக்கு தீா்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்பட்டவா் அவா்.

போா் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த 1998 ஆம் ஆண்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறைச்சாலையில் விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டாா். இறுதியில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்டாா்.

விடுதலையாகிய பின்னர் தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக சங்கமொன்றை உருவாக்க வேண்டுமென்ற சிந்தனைகளைக் கொண்டிருந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அத்துடன், குறித்த சிந்தனையை செயல் வடிவப்படுத்துவதில் ஏனைய ஊடகவியலாளர்களுடன் தோளோடு தோள்நின்று உழைத்தார். இதன் பயனாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உருவாகியது. அதில் இரு தடவைகள் தலைமைப்பதவியை ஏற்றிருந்த அவா் சிறப்பாக செயற்பட்டிருந்தமையும் வரலாறு.

வீரகேசரி, தினக்குரல், ரொய்ட்டர்ஸ், பி.பி.சி. உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு, சா்வதேச செய்தி நிறுவனங்களுக்கு தொடா்ந்து அறிக்கையிட்டு வந்திருந்த அவர், போர்க்காலம் உள்ளிட்ட விசேட நிலைமைகளில் மிகவும் காத்திரமான ஊடகப்பணியை துணிச்சலாக ஆற்றியிருந்தார்.

பி.பி.சி. தமிழழோசையில் போா்க்காலத்தில் தனது கணீரென்ற குரலில் அவா் வழங்கிய செய்திகள்தான் இன்றும் பலருக்கு நினைவிருக்கும்.

பத்திகள், கட்டுரைகள், விசேட கள அறிக்கைகள் என்று பல்வேறு பேசவல்ல விடயங்களை வெளிக்கொண்டுவந்திருந்த அவர், ஊடகத்துறைக்கு அப்பால் பல்பரிமாணங்களைக் கொண்டவராகவும் திகழ்ந்தார்.

பாரம்பரியப் பத்திரிகைத்துறையின் ஊடாக ஊடகத்துறைக்குள் பிரவேசித்த அவர், தொடர்ந்த தசாப்தங்களில் நவீன ஊடகங்களிலும் பணியாற்றிய பெருமையையும் ஒருங்கே கொண்டிருக்கின்றார். பல்வேறு சர்வதேசப் பயிற்சிகளைப் பெற்றுக் கற்றறிந்தவராக விளங்கிய அவர், இலங்கையில் பல பாகங்களிலும் இளம் ஊடகவியலாளர்களின் வளர்ச்சிக்காகப் பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்று கற்பித்தல்களை மேற்கொண்டதோடு, தனிப்பட்ட வகையிலும் வழிகாட்டியாகச் செயற்பட்டுள்ளார்.

ஊடகத்துறைக்கு அப்பால், மூன்று நூல்களையும் அவர் எழுதியிருக்கின்றாா். கால அதிா்வுகள், வாழத்துடிக்கும் வன்னி, மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் என்பன அவை. இவை அனைத்துமே போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களையும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நெருக்கடிகளையும் வெளிப்படுத்துபவை.

இதனைவிட “நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்” என்ற தலைப்பில் நான்காவது நூலையும் அவா் எழுதியுள்ளாா். இருந்த போதிலும் அதனை அவரால் அச்சடித்து வெளியிடமுடியவில்லை. அதனையும் விரைவில் முடித்து வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது.

அவா் மறைந்தாலும் அவா் எழுதிய நூல்கள் தொடா்ந்தும் அவரது பெருமையைப் பேசிக்கொண்டிருக்கும்.

– மூத்த ஊடகவியலாளர் இராசநாயகம் பாரதி

You May Also Like

About the Author: digital