வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போரின் போது இலங்கை போன்ற நாடுகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே தற்போது நிலவும் போர்ச் சூழல், இலங்கை போன்ற கிழக்கு நாடுகளுக்கும் மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்காவின் தாக்குதலால் ஈரான் போர்க்கப்பல் ஒன்று அழிவடைந்தது.
இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டிய கட்டாய சூழலுக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு எடுத்த தீர்மானத்தை நாம் பாராட்ட வேண்டும். சர்வதேச ஒப்பந்தங்களுக்கு மதிப்பளிக்கும் நாடாக அந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
மற்றொரு ஈரான் கப்பல் இலங்கைக் கடற்பரப்புக்கு வந்து உதவி கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி மிகவும் நிதானமாகச் செயற்பட்டு அதில் தலையிட்டுள்ளார். சர்வதேச விதிகளை மீறாமலும், போரில் ஈடுபட்டுள்ள வல்லரசு நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் அவர் மிகவும் நடுநிலையான முடிவை எடுத்துள்ளார்.
அந்தக் கப்பலை திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லவும், ஈரான் கடற்படையினரைப் பாதுகாப்பாக நாட்டுக்குள் அழைத்து வந்து மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது உண்மையிலேயே கடினமான, ஆனால் வரவேற்கத்தக்க ஒரு முடிவாகும்.
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போரின் போது இலங்கை போன்ற நாடுகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ முடிவெடுத்தால் நாடு என்ற ரீதியில் நாம் தேவையற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
நாங்கள் முப்பது கால போரால் பாதிக்கப்பட்ட ஒரு தேசம். போரின் விளைவுகளை நாங்கள் நன்கு அறிவோம்- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
