பிரித்தானியாவில், சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை சீனா பகிரங்கமாக மறுத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசும்போது, இரகசிய பொலிஸ் நிலையங்கள் என்று எதுவும் இல்லை. உண்மைகளை மதியுங்கள். மிகைப்படுத்தல்களையும் சீனாவைக் கொச்சைப்படுத்துவதையும் நிறுத்துங்கள், என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், சீன – பிரித்தானியா உறவுகளுக்குத் தடைகளை உருவாக்குவதை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என்றும், சீனா எப்போதும் சர்வதேசச் சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிப்பதோடு அனைத்து நாடுகளின் நீதித்துறை இறையாண்மையையும் மதித்து வருகிறது, என்றும்அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் இயங்குவதாகத் தெரிவிக்கப்படும் சீன இரகசிய பொலிஸ் நிலையங்களை மூடுவதற்கு லண்டன் உத்தரவிட்டதை தொடர்ந்து, அங்கு அப்படி எந்த இரகசிய அலுவகங்களும் இல்லை என சீனா உடனடியாகவே மறுத்துள்ளது.
பிரித்தானியாவில் மனித உரிமைகள் குழுவான சேஃப் கார்ட் டிபென்டர்ஸ் அமைப்பின் அறிக்கை வெளியானயைடுத்து, இரகசிய பொலிஸ் நிலையங்களை உடனடியாக மூடுமாறு பிரித்தானிய அரசாங்கம் சீனத் தூதரகத்திற்கு அறிவித்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் டொம் துகென்டட் தெரிவித்திருந்தார்.
சேஃப் கார்ட் டிபென்டர்ஸ் அமைப்பின் அறிக்கையின்படி, இந்த நிலையங்கள் நிர்வாக சேவைகளை வழங்குவதற்காக என்று அமைக்கப்பட்டபோதும், அவை குடியேறிய சமூகங்களைக் கண்காணிக்கவும் துன்புறுத்தவும் பயன்படுத்தப்பட்டதாகவும், சில சந்தர்ப்பங்களில் மக்களை சீனாவுக்குத் திரும்பும்படி வற்புறுத்தவும் உபயோகிக்கப்படுவதாகவும் டொம் துகென்டட் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.