கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லயனல் மெஸ்ஸி, இன்டர் மியாமி கால்பந்தாட்ட கழக அணியில் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இது நூறு சதவீதம் உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பி.எஸ்.ஜி. கால்பந்தாட்ட கழக அணியில் இருந்து மெஸ்ஸி வெளியேறினார். அப்போது முதல் அடுத்ததாக அவர் இணைய உள்ள அணி எது என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. மீண்டும் தனது பழைய அணியான பார்சிலோனா அணியுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி, பார்சிலோனா அணித் தலைவர் ஆகியோர் கிட்டத்தட்ட உறுதி செய்தனர்.
அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணி மற்றும் அமெரிக்காவின் இன்டர் மியாமி கழக அணிகளும் அவரை ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் இன்டர் மியாமி அணியை தெரிவு செய்துள்ளார் மெஸ்ஸி.
நான் இன்டர் மியாமி அணியில் இணைகிறேன். இந்த முடிவு 100 சதவீதம் உறுதி. பணந்தான் முக்கியம் என்றால் நான் சவுதி அரேபியாவின் கழகத்தில் இணைந்திருப்பேன். ஆனால், உண்மை என்னவென்றால் எனது எண்ணம் வேறானதாக உள்ளது. அது பணம் சார்ந்து அல்ல, என மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இதனை ஸ்பெயின் நாட்டின் பத்திரிகையொன்றுக்கு அவர் கூறியுள்ளார்.
வரும் 2026 ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்கா, மெக்சிக்கோ மற்றும் கனடாவில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் 2022 ஆண்டுக்குரிய உலகக் கிண்ணத்தொடரை வென்ற மெஸ்ஸி, அமெரிக்க நாட்டில் கழக அணிக்காக விளையாடுவது கால்பந்து விளையாட்டுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.