உலக டெஸ்ட சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது மூன்றாவது நடுவரின் தீர்ப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததற்காக சுப்மன் கில் மீது ஐ.சி.சி. போட்டி ஊதியத்தில் 15 சதவீத அபராதத்தை விதித்துளளது. ஏற்கனவே தாமதித்துப் பந்துவீசியதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியுமே தமது மொத்த போட்டி ஊதியத்தையும் தண்டப் பணமாக செலுத்தவேண்டியுள்ள நிலையில், மேலதிகத் தண்டனையைப் பெற்றுள்ள சுப்மன் கில், 115 சதவீதமாக அபராதத்தைச் செலுத்தும் நிலைக்குள்ளாகியுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில் ஸ்கொட் போலன்ட் வீசிய பந்தை அடிக்க, அதை கமரூன் க்ரீன் பிடித்த நிலையில், தொலைக்காட்சி நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ, சுப்மன் கில் ஆட்டமிழந்ததாக அறிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய பிடியெடுப்பு பெரிய பேசுபொருளாகவும் மாறியது.
இதையடுத்து, சுப்மன் கில் தனது டுவிட்டர் பக்கத்தில் மூன்றாவது நடுவரின் முடிவை விமர்சனம் செய்யும்விதமாக பதிவு இட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, நடுவரின் முடிவை விமர்சனம் செய்யும் விதமாக பதிவிட்ட சுப்மன் கில்லுக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதத்தை ஐ.சி.சி. விதித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா குறித்த நேர இலக்கை விட ஐந்து ஓவர்கள் குறைவாக பந்து வீசியதாகவும், அவுஸ்திரேலியா நான்கு ஓவர்கள் குறைவாக பந்து வீசியதாகவும் ஐ.சி.சி.யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஒரு ஓவருக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் வீதம், இந்திய அணிக்கு 100 வீத அபராதமும், அவுஸ்திரேலிய அணிக்கு 80 வீத அபராதமும் விதிக்கப்பட்டது.