ட்ரிபிள் அடித்தது மன்செஸ்டர்

இன்டர் மிலானுக்கு எதிராக இஸ்தான்புல்லில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1-0 என வெற்றி பெற்றதன் மூலம் சம்பியன்ஸ் லீக் தொடரொன்றை வெல்வதற்கான மன்செஸ்டர் சிட்டி அணியின் நீண்ட கால அவா நிறைவேறியுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் அரங்கில் நேற்று அதிகாலையில் இடம்பெற்ற இந்தப் பருவகால சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் சிட்டி அணிக்காக ரொட்றி 68 ஆவது நிமிடத்தில் கோலடித்தார். அந்த கோல் அந்த அணிக்கான வெற்றிக் கோலாகவும் அமைந்தது.

இன்டர் மிலான் அணிக்கு பல கோலடிக்கும் வாய்ப்புக்கள் வந்த போதிலும் அதனை அவ்வணி வீரர்கள் கோலாக்க தவறிவிட்டனர். இந்தப் போட்டியில் சிட்டி அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கெவின் டீ ப்ருயன் முதல் பாதியிலேயே உபாதையடைந்து வெளியேறியிருந்தார்.

இந்த வெற்றி மூலம் முகாமையாளர் பெப் குவார்டியோலாவின் மன்செஸ்டர் சிட்டி அணியானது பிரீமியர் லீக், எஃப்.ஏ. கிண்ணம் மற்றும் இறுதியாக சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வென்று, பிரீமியர் லீக் அணிகளில் இரண்டாவது தடவையாக ட்ரிபிள் அடித்த அணியாக சாதனை படைத்தது. இதற்கு முன் இந்த சாதனையை 1999 இல் சேர் அலெக்ஸ் பெர்குசன் முகாமைத்துவம் செய்த மன்செஸ்டர் யுனைடெட் அணி படைத்திருந்தது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply