விசைப்படகு பழுதானதால் கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்குப் பின்னர், பழுதான விசைப்படகுடன் மீனவர்கள் நால்வரையும் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர்.
ராமேஸ்வரத்ததைச் சேர்ந்த கிருஸ்ணவேணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், பசீர், அண்ணாதுரை, சீனி ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
மீனவர்கள் சனிக்கிழமை இரவு நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது விசைப்படகின் இஞ்சினில் இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுக்கடலில் பழுதாகியது.
இதனால் படகிலிருந்த மீனவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதனையடுத்து, விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக இலங்கையின் மன்னார் கடல் பகுதிக்குள் சென்றது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஞாயிற்றுகிழமை) மாலை அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும், படகையும் மீட்டு சர்வதேச கடல் எல்லையில் வைத்து விசாரனை நடத்தினர்.
அதன்பின்னர், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்க்கா தேவி என்ற ரோந்து கப்பலில் மீனவர்களையும் விசைப்படகையும் ஒப்படைத்தனர்.