யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இலவச கண்புரை சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , எதிர்வரும் 1ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் கண்புரை சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டிய நோயாளர்களைக் கண்டறியும் இறுதிக்கட்ட இலவச கண்பரிசோதனை முகாம் உடுப்பிட்டி கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதேவேளை குறித்த தினத்திலேயே சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்த கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களைக் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் காலை 9.00 மணி தொடக்கம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெறவுள்ளது.