குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சூறையாடி நாடாளுமன்றம் சென்று சுகபோகங்களை அனுபவிக்கும் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினரை வன்னி மாவட்ட மக்கள் இம்முறை தோற்கடிக்க வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.பி.லெம்பேட் தெரிவித்துள்ளார் .
“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் குறைந்தது 5 ஆசனங்களையாவது கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் நாம் களமிறங்கியுள்ளோம். எனவே, எமது மக்களின் பேராதரவை நாம் வேண்டி நிற்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் போரை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வன்னி மண்ணில் அரசியல் நடத்துகின்றனர். மக்களின் குருதி மேல் ஏறி நின்று அவர்கள் சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். ஊழல், மோசடிகளைச் செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ளடங்கும் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட குழுவினரை மக்கள் இம்முறை தோற்கடிக்க வேண்டும்.
இப்படியானவர்கள் நாடாளுமன்றம் சென்று எமது மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. எனவே, மக்கள் தோழர்களாக இருக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரை இம்முறை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவையுங்கள்.
வடக்கில் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறைந்தது 5 உறுப்பினர்களாவது நாடாளுமன்றம் செல்ல வேண்டும். அப்போதுதான் எமது மக்களுக்கு நாம் திறம்பட சேவையாற்ற முடியும். வடக்குக்கான முழுமையான அபிவிருத்திகளையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார் .