அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரிடம் 20 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக தனக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரே தன்னை விமர்சிக்கும் நபர்களுக்கு பணத்தை வழங்கும் உலகில் இருக்கும் ஒரே வர்த்தகர். 2016 ஆம் ஆண்டிலும் 5 மில்லியன் ரூபாவை வழங்கியதாக கூறினர். அப்போது மருத்துவர் சயுர, அவன்கார்ட் நிறுவனத்துடன் நடந்த தொலைபேசி உரையாடலை முற்றாக பதிவு செய்திருந்தார். இதனால்,அந்த குற்றச்சாட்டுக்கு எனக்கு அன்றும் பதில் இருந்தது.
தற்போது இந்த தொகை 20 மில்லியனாக மாறியுள்ளது. எவருக்கும் காசோலையில் பணம் என்று எழுதி இதனை செய்ய முடியும். பணம் வழங்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
விஜயதாச என்ற மனிதர் பணத்திற்காக எதையும் செய்வார். அதிகாரத்திற்காக எதையும் செய்வார். அப்படித்தான் கட்சிக்கு கட்சி தாவுவார். அவரிடம் கொள்கை ரீதியான விடயங்கள் எதுவுமில்லை. எங்களுக்கு கொள்கை இருக்கின்றது. எம்மை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. விஜயதாச போன்று எம்மை அதிகாரத்தாலும் வாங்க முடியாது.
எங்களை தோற்கடிக்க 50 கோடி ரூபாயை செலவிட போவதாக அவன்கார்ட் தலைவர் கூறியிருந்தார். அந்த பணத்தில் ஒரு பகுதியை விஜயதாச ராஜபக்சவுக்கு செலுத்தியிருக்கலாம்.
இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்று நான் விஜயதாச ராஜபக்சவின் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியை அல்ல, சட்டத்தரணி என்ற பட்டத்தையும் கழற்றுவேன் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.