15 பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

கிழக்கு மாகாணத்தில் 15 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் கிழக்கு மாகாண கல்வியமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

நான்கு 1ஏபி பாடசாலைகளுக்கும் பதினொன்று 1சீ தரப் பாடசாலைகளுக்கும் இவ்விண்ணப்பம் மாவட்டரீதியாகக் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்பதாக அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளருடாக விண்ணப்பிக்க வேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா அறிவித்துள்ளார்.

காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரி செட்டிபாளையம் மகா வித்தியாலயம் சேனையூர் மத்தியகல்லூரி கிண்ணியா அஸ்சிறாஜ் முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகிய நான்கு 1 ஏபி பாடசாலைகளுக்கு வெற்றிடம்நிலவுகிறது.

வெற்றிடம் நிலவும் குறித்த பாடசாலை அமையப்பெற்ற வலயத்தில் பணியாற்றும் முதலாந்தர அதிபர்கள் விண்ணப்பித்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். அந்த வலயத்தில் முதலாந்தர அதிபர் தரத்திலுள்ளவர்கள் இல்லாத பட்சத்தில் ஏனைய வலயங்களிலுள்ள முதலாந்தர அதிபர்கள் கருத்திற்கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வலயத்தில் முதலாந்தர அதிபர்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில், அவ்வலயத்திலுள்ள இரண்டாந்தர அதிபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அந்த வலயத்தில் அவ்வகை அதிபர்கள் இல்லாவிடில் ஏனைய வலயத்திலுள்ள இரண்டாந்தர அதிபர்கள் கவனத்திற்கொள்ளப்படுவர் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முதலாந்தர அதிபர்கள், இரண்டாந்தர அதிபர்கள் விண்ணப்பிக்காதப் பட்சத்தில் அந்த வலயத்திலுள்ள மூன்றாந்தர அதிபர்கள் கவனத்திற்கொள்ளப்படுவார்கள்.

அதிபர்களின் வயது எல்லை 59 இருக்கவேண்டும். இந்தத் தகைமையுடைய அதிபர்கள் விண்ணப்பித்திருந்தால் அடுத்தர அதிபர்கள் கவனத்திற்கொள்ளப்படமாட்டார்கள். நேர்முகப்பரீட்சை ஊடாக புள்ளியிடலுக்கேற்ப பொருத்தமான அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்களெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir