மட்டக்களப்பு வெல்லாவெளியில் பதட்ட நிலை!

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசத்தை அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் நேற்று வேத்துசேனை கிராமத்தில் உள்ள புளியடி வைரவர் ஆலயம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டுச் சென்றதையடுத்து பொதுமக்கள், கிராமவாசிகள் இதன்போது குழப்பமடைந்தனர்.

அதாவது, குறித்த தமிழ் கிராமத்தில் பௌத்த மத ஆலயம் அமைக்கப்படலாம் என சந்தேகம் வெளியிட்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு தமது பூர்வீக காணியில் தொல்பொருள் நிலையம் அமைப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என தமது பலமான எதிர்ப்பை வெளியிட்டார்கள்.

இதனால், இன்று வேத்துச்சேனை கிராம மக்கள் குறித்த பகுதியில் எதிர்ப்பு நடவடிக்களை முன்னெடுக்க முற்பட்ட வேளையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களிடையே கடும் முறுகல்நிலை ஏற்பட்டது.

“குறித்த காணியானது தனியாருக்குச் சொந்தமான காணியின் ஒருபகுதி விளையாட்டு மைதானமாகவும் மற்றையை பகுதி வேத்துச்சேனை புளியடி வைரவர் ஆலயத்திற்காகவும் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொல்பொருள் பகுதியாக அடையாளப்படுத்த அனுமதிக்கமாட்டோம்” என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, அங்குவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சாணக்கியனுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம், குறித்த இடத்திற்குச் சென்றிருந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வியாழேந்திரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் அருண்தம்பிமுத்து ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசமுற்பட்டபோது ஆர்ப்பாட்டர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் அவர்களை பொதுமக்கள் அங்கிருந்து செல்லுமாறு கோசங்களை எழுப்பினர்.

இதன்போது குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சீ.யோகேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது, வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் சென்று குறித்த சம்பவத்தைப் பார்வையிட்டதுடன் இவ்விடயமாக மக்களுடன் கலந்துரையாடினர்.

இதையடுத்து, குறித்த ஆலய பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் ஆலயத்தை துப்பரவுசெய்து பூசை வழிபாட்டையும் மேற்கொண்டார்கள். குறித்த பிரதேசத்தில் பொலிஸார், இராணுவத்தினர் தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதேவேளை, இன்று மட்டக்களப்பு விகராதிபதி அம்பிட்டிய சுமணரத்ண தேரர், வேத்துச்சேனை கிராமத்திற்குச் சென்றநிலையில் அங்குள்ள பொதுமக்களால் அவ்விடத்தில் இருந்து திருப்பி அனுப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் சுமூக நிலைமை ஏற்பட்டத்துடன் பொதுமக்கள் அவ்வாலயத்தில் வழமைபோன்று பூசை வழிபாட்டுகளை மேற்கொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir