கொரோனாவால் உலகமே பொருளாதார ரீதியாக பல பிரச்னைகளை சந்தித்து இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த ஊரடங்கால் சில நன்மைகளும் நடந்துள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது. குறிப்பாக இயந்திரமான வாழ்க்கை முறையில் குடும்பத்தில் கூட நேரத்தை செலவிட முடியாத பலரையும், இந்த லாக்-டவுன் குடும்ப உறவுகளுக்குள் ஒரு பிணைப்பை உண்டு பண்ணி உள்ளது.
இதை வலியுறுத்தும் விதமாக பிரபல நாடக மற்றும் டிவி புகழ் வரதராஜன் குறும்படம் ஒன்றை இயக்கி, தனது யுடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். சங்கீதா Vs சந்துரு என பெயரிடப்பட்டுள்ள இதில் ஷங்கர் குமார், உஷா நந்தினி கணவன், மனைவியாக நடித்துள்ளனர். 3 மாதமே திருமணமான இந்த தம்பதியர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் விவாகரத்து கேட்டு செல்கின்றனர். நீதிபதியாக வரும் திவாகர், ஒரு மாதம் டைம் தருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து வாழுங்கள், அப்படியும் ஒத்துவரவில்லை என்றால் பின்பு வாருங்கள் விவாகரத்து பண்ணி வைக்கிறேன் என்கிறார்.
ஒரு மாதம் எப்படி சேர்ந்து இருப்பது என புலம்பியபடி கணவன், மனைவி வீட்டில் தவிக்க, கொரோனா பற்றிய ஊரடங்கை பிரதமர் அறிவிப்பதை டிவியில் கண்டு இன்னும் அதிர்ச்சியாகின்றனர். அதன்பின் இவர்களுக்குள் இருந்த கோபம் எல்லாம் மறைந்து இருவரும் இணைவது மாதிரி இந்த குறும்படம் முடிகிறது.
குறும்படத்தை காண அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=7W9z3l9vnVQ&feature=youtu.be