பிரசவித்த பெண்ணின் கருத்தடை சாதனத்தை பிடித்தபடி வடக்கு வியட்நாம் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை, பலரும் விநோதமாக பார்த்தும், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
வடக்கு வியட்நாமில் உள்ள ஹைபோங் சர்வதேச மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் கையில் தாயின் கருத்தடை சாதனமும் இருந்தது.
அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், குழந்தை கருத்தடை சாதனத்தை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், மகப்பேறியல் நிபுணர் டிரான் வியட் பூங், கருத்தடை சாதனத்துடன் பிறந்த குழந்தையை புகைப்படம் எடுத்தார்.
அவர் தற்போது அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘இந்த குழந்தை இந்த உலகத்திற்கு தாயின் தோல்வியுற்ற கருப்பை கருவியை (ஐ.யு.டி) பிடித்துக் கொண்டே பிறந்தது’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘தாயின் பிரசவத்திற்குப் பிறகு, அந்த குழந்தை கருத்தடை சாதனத்தை கையில் வைத்திருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தேன்.
இது மிகவும் சுவாரஸ்யமானது என்று நினைக்கிறேன். அதனால், குழந்தையை புகைப்படம் எடுத்தேன்.
அது இவ்வளவு கவனத்தை ஈர்க்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. குழந்தையை பெற்ற 34 வயதான தாய், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் கருத்தடை சாதனம் பொருத்திக்கொண்டார்.
ஆனால் ஆச்சரியமான முறையில் கர்ப்பமடைந்தார். அந்த சாதனம் சரியாக பொருத்தப்படாமல் விட்டிருக்கலாம்.
அதன் அசல் நிலையில் இருந்து நகர்த்தப்பட்டிருக்கலாம். அதனால் தாயின் கருத்தடை ஒரு பயனற்ற வடிவமாக மாறி, தாயின் கர்ப்பப் பையில் சென்றுவிட்டது.
கருத்தடை சாதனம் குழந்தையின் உடலில் காயப்படுத்தவில்லை. பிறந்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக 3.2 கிலோ எடையுடன் உள்ளது.
அந்த பெண்ணுக்கு இது மூன்றாவது குழந்தை. உலகில் எத்தனையோ குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், இந்த குழந்தை கருத்தடை சாதனத்தை புறம்தள்ளி பிறந்துள்ளது.
சமூக வலைதளங்களில் புகைப்படத்தை மறுபதிவிட்டு பலரும் தங்களது கருத்தை ெதரிவித்து வருகின்றனர்.
இந்த குழந்தை இந்த உலகிற்கு பெரும் பங்களிப்பு அளிக்கும் என்றும், இந்த குழந்தை பிறக்க விதிக்கப்பட்டது என்றும் தெரித்துள்ளனர்.
மற்றொரு பதிவர், ‘எனக்குத் தெரிந்த ஒருவருக்கு இதேபோல் குழந்தை பிறந்தது’ என்றும் கூறியுள்ளார். சிலர் இது அதிர்ஷ்டம் என்று சொன்னார்கள்’ என்றார்.
இந்த புகைப்படத்தை பார்த்த அந்த குழந்தையின் தாய், அதன் நம்பகத்தன்மை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இதுபோன்று குழந்தை பிறப்பது என்பது இது முதல் தடவையல்ல. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இது தாயின் தோல்வியுற்ற கருத்தடை என்றே கூறலாம்.
2017ம் ஆண்டில், டெக்ஸ்டர் என்ற ஆண் குழந்தை இதேபோல் கருத்தடை சாதனத்துடன் பிறந்தது. பொதுவாக ‘ஐயுடி’ (Intrauterine device) என்று அறியப்படும் கருத்தடை சாதனங்கள், பெண்கள் கர்ப்பமடையாமல் தடுக்க கருப்பையில் செலுத்தப்படும் ‘T’ வடிவ பிளாஸ்டிக் கருவியாகும்.
இது ஒரு முறை பொருத்தப்பட்டால் 12 ஆண்டுகள் பலனளிக்க வல்லது மற்றும் முழுவதுமாக மீளக் கூடியது. அதாவது, இக்கருவியை நீக்கிய பின்னர் மீண்டும் எளிதாக கர்ப்பம் தரிக்க முடியும். இந்த கருவியை பொருத்துவதால், கர்ப்பப்பையில் கருத்தரிப்பைத் தடை செய்து கரு அணுகவும், கரு முட்டையும் இணைவதையும் தடை செய்கிறது. ஆனால், அவை சரியாக பொருத்தப்படாமை போன்ற காரணங்களால், இதுபோன்ற விநோதங்கள் நடப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.