காலி சிறைச்சாலையில் பல கைதிகளின் மரணத்திற்கு காரணமான மெனிங்கோகோகஸ் மூளைக்காய்ச்சல் பாக்டீரியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நோயாளி ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.
சுகயீனம் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சில மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.எம்.குணதிலக்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுமார் 30 பேர் அவரது பணியிடத்தில் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் குணதிலக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மெனிங்கோகோகஸ் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரையாவது அடையாளம் காண்பது மிகவும் ஆபத்தானது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.