
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 73ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அன்னாரது சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும், மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை 19.07.2020ம் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற நிகழ்வானது, சுவாமி விபுலானந்தர் சிவானந்தா நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில், கல்லடி இராமகிருஷ்ணமிஷன் சுவாமி தட்சயானந்தா, சுவாமி நீலமாதவானந்தா போன்றோர் கலந்துகொண்டு விஷேட பூசைகள் நடாத்தி அஞ்சலி செலுத்தினர்.
இதில் நூற்றாண்டு சபையின் தலைவர் கே. பாஸ்கரன் மற்றும் சபையின் உறுப்பினர்கள், கல்விமான்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலை மாணவிகளால் சுவாமி விபுலானந்தரின் ‘வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ’ எனும் பாடலும் பாடப்பட்டது.
தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.