கோம்பயன் மணல் இந்துமயான சேவைகளுக்கான புதிய கட்டணங்கள் யாழ்மாநகர சபையின் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமரத்துவம் அடைந்தவர்களின் பூதவுடல்களை விறகில் தகனம் செய்வதற்கு 5000ரூபாவும், 14 வயதுக்கு மேற்பட்டோரின் பூதவுடல்களை மின்சாரத்தில் தகனம் செய்வதற்கு 16000 ரூபாவும், 14 வயதுக்கு உட்பட்டோரின் பூத்தவுடல்களை தகனம் செய்ய 8000 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்ற கட்டளைகள், பொலிஸாரின் வேண்டுகோள், கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல், வைத்தியசாலையின் உரிய அனுமதியுடன் கொண்டுவரப்படும் 14 வயதுக்கு மேற்பட்டோரின் பூதவுடல்களை புதைத்து அடக்கம் செய்வதற்கு 8000 ரூபாவும் 14 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களின் பூதவுடல்களை புதைத்து அடக்கம் செய்வதற்கு 6000 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அகற்றப்பட்ட உடற்பாகங்கள் 1 கிலோகிராம் தொடக்கம் 30 கிலோகிராம் வரையான பொதிகளை புதைப்பதற்கு 4000 ரூபாவும் 30 கிலோகிராம் தொடக்கம் 60 கிலோகிராம் வரையான பொதிகளை புதைப்பதற்கு 8000 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இறந்த கால்நடைகளை புதைப்பதற்கு 8000ரூபாவும் மலர்சாலையிலிருந்து கொண்டுவரப்படும் உடற்பாகக் கழிவுகளையும் உடைக்கழிவுகளையும் அகற்றுவதற்கு வாரமொன்றிற்கான கட்டணமாக 5000 ரூபாவும் யாழ்மாநகர சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குறித்த கட்டண அதிகரிப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் யாழ்மாநகர சபை தெரிவித்துள்ளது.