அக்கராயன் ஏற்று நீர்ப்பாசனம் மூலம் சிறந்த பலனைப்பெறும் மக்கள்

13 ஆம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆண்ட அக்கராயன் மன்னனால் கட்டப்பட்டது அக்கராயன் குளமாம். அதனோடு இணைந்த கிராமம் சிறந்த நீர் வளமும் மண்வளமும் கொண்டமைந்தது காணப்படுகின்றது.

ஆண்டாண்டு காலமாக மக்கள் இக்குளத்தை நம்பி விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.
மாரி காலங்களில் நீரை அதிகமாகப் பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பினும் கோடைகாலங்களில் மேட்டு நிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்வது கடினமாக காணப்பட்டது. இதன் காரணமாகவே 1965 ஆம் ஆண்டு “அக்கராயன் ஏற்று நீர்ப்பாசன முறைமை” ஆரம்பிக்கப்பட்டது .

ஆரம்பகாலத்தில் டீசலின் துணைகொண்டு விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றமைக்கு சான்றாக உற்பத்திகள் கிளிநொச்சி சந்தையையும் தாண்டி, யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தைவரை சென்றிருக்கின்றன என்று ஊர் மக்கள் சான்று பகிர்கின்றனர்.

இவ்வாறு மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்லும் காலகட்டத்தில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இந்த ஏற்றுநீர்ப்பாசன முறைமையானது முற்றிலும் சீர்குலைந்து போனது. இதனால் உற்பத்திகளும் ஏனைய நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன. இதன்போது கிளிநொச்சி மாவட்டம் மேலும் பின்தங்கியே காணப்பட்டது.

பின்நாளில் ஏற்பட்ட டீசல் பற்றாக்குறை காரணமாக இத்திட்டமானது மேலும் வலுவிழந்து போனது.

இதனால், பாரிய சவால்களை எதிர்கொண்ட மக்கள் சூரியப் படல் மூலம் இயந்திரத்தை இயங்கச் செய்து நீரைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை முன்வைத்தனர். இத்திட்டமானது பலராலும் வரவேற்கப்பட்டது.

இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று வடமாகாண சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் முனைப்புக் காட்டி வந்தது.

இதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடமும் பொறியியல் பீடமும் இணைந்து செயற்பட சம்மதம் தெரிவித்தனர். அதனோடு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையும் இணைந்தது.

அச்சமயம் அரசாங்கத்தில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை அறிந்து றிலையன்ஸ் நிறுவனமானது திட்ட நிதியியல் 50 சதவீதத்தினை பங்களிப்புப் செய்வதாக சம்மதம் தெரிவித்தது.

அது மட்டுமல்லாமல் CSNHA நிறுவனமும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தமது நிதிப் பங்களிப்பை செய்தனர். இதன் பலனாக ஸ்கந்தபுரம் ஏற்று நீர்ப்பாசனம் திட்டமானது விரைவாக செயல் வடிவம் கண்டது.

கடந்த ஐப்பசி மாதம் 18 ஆம் திகதி பல நல்லுள்ளங்கள் முன்னிலையில் இத்திட்டமானது மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது 360ஏக்கர் நிலப்பரப்பும்183 நேரடிப்பயனாளர்களும் 1000 மறைமுக பயனாளர்களும் பயன்பெறுவர் என்று தெரியவந்தது.

இத்திட்டத்திற்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கிய Wilde Ganzen, Cooperative society of Netherland for humanitarian activities (CSNHA), K.O.O.K, STICHTING MGM, Montfortanen giften commission Netherland, Killi People, Direkte hilfe thannir- Wasser நிறுவனங்களுக்கு மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

இதுபோன்று வேறு பல திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் எம்மக்களும் மண்ணும் மேன் மேலும் வளம் பெறும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

மக்களின் முகங்களில் புன்னகையைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கின்றது.

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது”

-வி.டிநோசாந்

You May Also Like

About the Author: digital

Leave a Reply