ஸ்ரீலங்கன் விமான சேவையின் விற்பனை தொடர்பான விலைமனு கோரலை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், விமான சேவைக்கு சொந்தமான 510 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை திறைசேரிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தற்போது சுமார் 1.2 பில்லியன் ரூபாய் கடனில் இருப்பதாகவும் இந்த கடன் தொகையுடன் அதனை வாங்குவதற்கு எந்தவொரு விமான நிறுவனமும் முன்வரவில்லை எனவும், அதன் காரணமாக, மார்ச் 5ஆம் திகதி மாலை 3:00மணியுடன் முடிவடையவிருந்த விலைமனு கோரலை இன்னும் 45 நாட்களுக்கு நீட்டிக்க முடிவெடுத்துள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த 06 மாதங்களுக்கு 60 முதல் 70 மில்லியன் டொலர்கள் திறைசேரியிலிருந்து வழங்கப்படவுள்ளது. இதனால், தற்போதைய நிலையை விட உயர்ந்த தரத்திலான சேவையினை ஸ்ரீலங்கன் விமான சேவையினால் வழங்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இலக்கை அடைவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உட்பட அனைத்து ஊழியர்களும் திறமையாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும். துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் விமான சேவை செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விமான நிறுவனத்தின் விவகாரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்கவோ அல்லது கொடுப்பனவுகளை அதிகரிக்கவோ முடியாது. தேவையற்ற வெளியூர் பயணங்கள் மற்றும் தேவையற்ற செலவுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த 6 மாத காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னேற்றம் காணா விட்டால், பணிப்பாளர் சபை மாற்றம் செய்யப்படும்.
விமான நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் ஆறாயிரம் ஊழியர்களின் தொழில் உத்தரவாதத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்றார்.