டுபாயில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று (16) பெய்த கனமழையால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீதிகளில் நீர் தேங்கியதனால் பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

மாலையில் 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டதுடன் எண்ணற்ற விமானங்கள் காலதாமதமாகவும் ரத்து செய்யப்பட்டும் இருந்ததால் விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததனால், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கியதுடன் விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் விமான நிலையத்திற்கு வந்து சேரும் வீதிகளும் நீரில் மூழ்கி இருந்தன.

இதேபோன்று, டுபாயில் உள்ள டுபாய் மோல், அமீரக மோல் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டதுடன்  டுபாயின் மெட்ரோ தொடருந்து நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply