சீன அரசின் அழுத்தத்தை அடுத்து லைசென்ஸ் இன்றி செயல்பட்டு வந்த விளையாட்டு சார்ந்த செயலி உள்பட 30,000 செயலிகளை தனது ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம், செயலியை பயனர்கள் வாங்குவதற்கு சீன அரசிடம் பதிவு செய்து பெற்ற லைசென்ஸ் எண்ணை ஜூன் மாத இறுதிக்குள் அளிக்க வேண்டுமென அவகாசம் அளித்திருந்தது.
சீனாவின் ஆண்ட்ராய்டு தளம் நீண்ட காலமாக அந்த விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. கடந்த ஜூலை முதல்வாரத்தில், 2,500க்கும் மேற்பட்ட செயலிகளை தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியது.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஜைங்கா மற்றும் சூப்பர்செல் உள்ளிட்டவையும் அடங்கும் என ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் கூறியுள்ளது. இந்த ஆண்டு ஆப்பிள் ஏன் அவற்றை கண்டிப்பாக செயல்படுத்துகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
சீன அரசு நீண்டகாலமாகவே, கேமிங் (Gaming app) செயலிகளில், உணர்ச்சிவசமாக உள்ளடக்கங்களை நீக்குமாறும், கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வலியுறுத்தி வருகிறது. ஆனால் விளையாட்டு செயலிக்கான ஒப்புதல் செயல்முறை நீண்ட மற்றும் சிக்கலானது.
இது மிகப்பெரிய கேமிங் ஆப்களை உருவாக்குபவர்களை தவிர மற்ற அனைவரையும் காயப்படுத்துகிறது என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
‘ஆப்பிளின் இந்த நடவடிக்கை, வணிகரீதியில் உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல், காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான டெவலப்பர்களின் வருமானத்தை பெரும்பாலும் பாதிக்கும்.
இது சீனாவின் முழு ஐ.ஓ.எஸ் விளையாட்டுத் துறையிலும் பேரழிவை ஏற்படுத்தும்’ என ஆப்இன் சைனா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் டோட் குன் தெரிவித்துள்ளார்.