ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான விறு விறுப்பான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது
நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்திய அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாது தடுமாறி, 19 ஓவர்கள் நிறைவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்திய அணி சார்பில் ரிஷப் பண்ட் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பாகிஸ்தானின் நஸீம் ஷா, ஹரீஸ் ரவுப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மொகமட் அமீர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின்னர் 120 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணி தனது பந்துவீச்சினால் வேகமாக ஓட்டங்களைப் பெற முடியாது கட்டுப்படுத்தியது. 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் மொகமட் ரிஸ்வான் அதிகபட்சமாக 31 ஓட்டங்களை எடுத்திருந்தார். இந்திய அணியின் பும்ரா 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக பும்ரா தெரிவானார்.