ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வெர்த் லுயில் முறையில் (டிஎல்எஸ்) வெற்றியீட்டியது.
மேற்கிந்தியத் தீவுகளின் அன்டிகுவாவில் இன்று (21) நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணித் தலைவர் நஜ்முல் ஹுசைன் சான்டோ 41 ஓட்டங்களையும், தௌஹீத் ஹ்ரிடோய் 40 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
அவுஸ்திரேலியா அணியின் பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், அடம் சம்பா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பட் கம்மின்ஸ் 17 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா அணி சார்பில் ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் ஹட்ரிக் விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது ரி-20 உலகக் கிண்ணத் தொடரின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பிரெட் லீ ஹட்ரிக் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
141 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. மீண்டும் போட்டியை ஆரம்பிக்க முடியாதளவுக்கு மழை பெய்ததனால், அத்துடன் நிறுத்திக்கொள்ள நடுவர்கள் தீர்மானித்தனர். டிஎல்எஸ் முறைப்படி 11.2 ஓவர்களில் 73 ஓட்டங்கள் போதுமென்ற நிலையில் அவுஸ்திரேலியா 28 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
அவுஸ்திரேலியா அணியின் டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ரிஷாத் ஹுசைன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக பட் கம்மின்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.