தொழிலை இழந்த மின்சார சபை ஊழியர்களுக்காக வாதிட அவர்களிடமிருந்து 58 இலட்சம் வசூல்!

தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டு தமது தொழிலை இழந்துள்ள 62 இலங்கை மின்சார சபை ஊழியர்களின் வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணி சுனில்  வட்டகல மின்சார ஊழியர்களிடமிருந்து 58 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளார்  என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மின்சார சபை ஊழியர்கள் சிலர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனரா என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஜனவரி மாதம் முதல், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான பல தொழிற்சங்கங்கள் புதிய மின்சாரச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, மின்சாரத் துறையில் உள்ள அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் என்ற மாயையை உருவாக்கி தமது  அரசியல் இலக்குகளை அடையும் நோக்கில் தமது தொழிற்சங்கங்களை தூண்டி போராட்டங்களை நடத்தினர்.

போராடினாலும் பரவாயில்லை. ஆனால், அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தோம். அவை எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதனால், தொடர்ச்சியாக

மூன்று நாட்கள் கருமை பீடங்களை மூடச்செய்தமை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது. இவ்வாறான செயலில் ஈடுபட்ட 62 ஊழியர்கள் அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இப்போது அவர்கள் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் அறிவுறுத்தியுள்ளோம்.

இந்த போராட்டங்களை நடத்துமாறு தூண்டிய அரசியல் கட்சியினர் அவர்கள் சார்பாக வாதிடுவதற்காக தொழிற்சங்கங்களிலிருந்து பணம் வசூலித்து வருகின்றனர் என பல தொழிற்சங்கங்கள் இது குறித்து என்னிடம் சில தகவல்களை தெரிவித்துள்ளன.

அதாவது, தொழிலாளர்களை வீதிக்கு இறக்கி போராட்டங்களை நடத்தி விட்டு இப்போது அவர்களுக்காக வாதிட  ஜே.வி.பியின் சட்டத்தரணி சுனில் வட்டகல தொழிற்சங்கங்களிடமிருந்து 58 இலட்சம் ரூபாவை சட்ட சேவைக்  கட்டணமாக பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த 62 அப்பாவித் தொழிலாளர்கள் தொழிலின்றி 6 மாதங்களாக வீட்டில் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்திய இதர மின்சார சபை ஊழியர்களிடமே அவர்களுக்கான பணமும் அறவிடப்பட்டுள்ளது” – என்றார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply