நாட்டின் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான நியமனக் கடிதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரே சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேசபந்து தென்னகோனின் நியமனம் முற்றிலும் தவறானது. சபாநாயகரால் அனுப்பப்பட்ட கடிதம் திரிபுபடுத்தப்பட்ட கடிதமே.
இதன் அடிப்படையில் அரசியலமைப்பை ஜனாதிபதி அப்பட்டமாக மீறியுள்ளார். அரசியலமைப்பை மீறியே பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை திரிபுபடுத்தி சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை இந்த சபைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
இது அரசியலமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். இந்த மோசடி கடிதத்தின் அடிப்படையில் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரை நியமித்தது சட்டவிரோதமானது. ஜனாதிபதியும் அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளார்.
இது பிரதமருக்குத் தெரியும்.பிரதமரால் இதற்கு பதில் சொல்ல முடியாது. சபாநாயகரும் அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளார். அதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?ஜனாதிபதி இந்த விடயத்தை நன்கு அறிந்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று குறிப்பிட்டார்.