ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்குமாறு ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று (24) நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எமது நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்க முடிவதில்லை. நமது நாட்டில் 17 தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் 52 வானொலி நிலையங்கள் உள்ளன. தேர்தல் காலங்களில் இவற்றில் பணியாற்றுபவர்கள் தேர்தல் பணிகளிலேயே இருப்பதுண்டு. இதனால் அவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்கும் வாய்ப்பு அமைவதில்லை.
எனவே, இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கையொன்றை முன்வைக்குமாறும், உத்தியோகபூர்வ ஊடக அடையாள அட்டை உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான அனுமதியை கேட்கும்படியும் மேற்படி ஊடகத்துறையினர் என்னிடம் தெரிவித்தனர். அவர்களது அந்த கோரிக்கையினை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு சமர்ப்பிற்கின்றேன்” – என்றார்.