ஜனாதிபதித் தேர்தலுக்குப் பணம் தேடும் நோக்கில் அரசாங்கத்தின் சொத்துக்களை கொள்ளையடித்து விற்பனை செய்யும் மோசடியை அரசாங்கம் நடத்தி வருவதாக ஊழல் எதிர்ப்புக் கூட்டணியின் தலைவர் வசந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கொழும்பின் மையப் பகுதியில் ஏழரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 300 அறைகளைக் கொண்ட ஹில்டன் ஹோட்டலை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமரசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி ஹில்டன் ஹோட்டல் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஏழு நட்சத்திர ஹோட்டலாக தரமுயர்த்தப்பட்டுள்ளது எனவும், கடந்த வருடத்தின்போது 124 பில்லியன் டொலர்களுக்கு இதனை விற்பனை செய்ய மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், அண்மையில் அதனை 55.5 பில்லியன் டொலர்களாக மறுமதிப்பீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தற்போது இதனை 41.5 பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இது இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 12,300 மில்லியன் ரூபா எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு முறையாக வரி செலுத்தாத ஒருவருக்கு இந்த ஹோட்டலை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும், அவ்வாறே, கண்டி போகம்பரை சிறைச்சாலை பகுதியில் ஹில்டன் ஹோட்டலை நிர்மாணத்திற்காக விற்பனை செய்ய முயல்வதாகவும், தேர்தலுக்கு தேவையான பணத்தை ஈட்டிக்கொள்ளவே இந்த கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுவதாகவும் சமரசிங்ஹ மேலும் தெரிவித்துள்ளார்.