இந்தியப் பிரதமா் மோடியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு !

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இலங்கையில் ஜனாதிபதித் தோ்தல் நடைபெறுவதால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. தோ்தல் முடிவடைந்த பின்னரே அவரது விஜயத்துக்கான திகதி தீா்மானிக்கப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஜூன் 20 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது இந்தியப் பிரதமரின் விஜயம் தொடா்பாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்னா் புதுடில்லியில் நடைபெற்ற இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்றிருந்த போதும், இந்தியப் பிரதமரின் கொழும்பு விஜயம் தொடா்பாகப் பேசப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் ஜனாதிபதித் தோ்தல் தொடா்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டதையடுத்து இந்தியப் பிரதமரின் விஜயம் குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

செப்ரெம்பா் 21 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தோ்தலில் கவனத்தைக் குவித்திருப்பதால், வெளிநாடுகளின்  தலைவா்களுடனான தொடா்பாடல்களை இலங்கை அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளது.

தோ்தலுக்கான நியமனப் பத்திரங்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸவும் தோ்தலில் போடடியிடுவதற்காக தமது கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளாா்கள்.

அண்மைக்காலத்தில் இலங்கை இந்திய உறவுகளைப் பொறுத்தவரையில் புதிய அணுகுமுறைகளைக் காணமுடிந்து. இருநாடுகளுக்கும் இடையில் பாதை அமைப்பது, மின் சக்தி வழங்கல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடா்பில் பேசப்பட்டு இணக்கம் காணப்பட்டடது.

ஜனாதிபதித் தோ்தலில் எவ்வாறான அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும், இவற்றைத் தொடர வேண்டும் என்று இந்திய வெளிவிவகார  அமைச்சா் ஜெய்சங்கா் தனது கொழும்பு விஜயத்தின் போது வலியுறுத்தியிருந்தாா்.

ஜனாதிபதித் தோ்தல் நடைபெறவிருப்பதால் மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபுக் குடியரசு ஆகியற்றின் தலைவா்கள் இலங்கைக்கு முன்னெடுக்கவிருந்த விஜயங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply