அமெரிக்காவில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, 50 லட்சத்தை நெருங்கியுள்ளது; 1.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, ராக்பெல்லர் அறக்கட்டளையின் முன்னணி தொற்றுநோய் தடுப்பு வல்லுநரும், டியூக் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவருமான ஜானதன் குயிக் தெரிவித்துள்ளதாவது:தற்போது 50 லட்சம் நோயாளிகளை எட்ட இருக்கிறது அமெரிக்கா. நாள்தோறும் 60 ஆயிரம் பேர் புதிததாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த மாதத்தில் 70 ஆயிரம் பேர் அதிகபட்சமாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டார்கள். 26 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த வாரத்திலிருந்து நாள்தோறும் 780 என்ற எண்ணிக்கையில் இருந்த உயிரிழப்பு படிப்படியாக அதிகரித்து ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சுகாதார நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் விதவிதமாக கருத்துக்களை கூறி மக்களை குழப்பி வருகின்றனர். சிலர் முகக்கவசம் அணியுங்கள் என்றும், சிலர் தேவையில்லை என்றும் கூறி மக்களை குழப்புவதால் விதிகளை மக்கள் பின்பற்றுவதில்லை. இப்படி இருந்தால் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புளோரிடா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் தடுப்பு வல்லுநர் மருத்துவர் சிண்டி பிரின்ஸ் கூறுகையில், ”மக்களின் பழக்கவழக்கம், நடவடிக்கைதான் கொரோனா அதிகரிப்புக்கு காரணம். மக்கள் அனைவரும் சுயநலத்துடன், சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். தடுப்பு நடவடிக்கை என்றாலே நமது பழக்கத்தை மாற்றியமைப்பதுதான். ஆனால், இதைச் செய்ய அமெரிக்க மக்கள் தயங்குகிறார்கள். பழக்கவழக்கத்தால் வரும் நோய்தான் கொரோனா. இதை நாம் பழக்கத்தை மாற்றுவதின் மூலம் தோற்கடிக்க முடியும். ஆனால் இதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்,” எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir