(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபையின் வருமான வாரத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்கள் மீதான களப் பரிசோதனை நடவடிக்கை நேற்று புதன்கிழமை பெரிய நீலாவணையில் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ்வின் நெறிப்படுத்தலில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
மூன்றாவது நாளாக நடைபெற்ற இக்களப் பரிசோதனை நடவடிக்கையில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக், வருமான பரிசோதகர்களான ஏ.ஜே. சமீம், எம். உபைதுல்லாஹ், எம்.எம். ரைஹான், சுகாதாரப் பரிசோதகர்களான ஜே.எம். நிஸ்தார், எம்.எம். பாறுக், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான நாகரத்தினம், எம்.சி.எம்..நுஸ்ரத் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மாநகர சபையின் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு வருமான வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கடந்த திங்கட்கிழமை தொடக்கம் அதற்கான களப்பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது வர்த்தக நிலையங்களில் வியாபார அனுமதிப் பத்திரம் பரீட்சிக்கப்பட்டு, இதுவரை இந்த ஆண்டுக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றிராத வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அப்பத்திரத்தை அவர்கள் இலகுவாக பெற்றுக் கொள்வதற்காக அதே இடத்தில் ஆரம்ப நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் ஏற்கனவே வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றிருந்த வர்த்தக நிலையங்களுக்கும் புதிதாக அதனைப் பெறுவதற்காக கட்டணம் செலுத்தப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கும் “நேர்த்தியான வரியிறுப்பு நிறுவனம்” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டன.
அதேவேளை உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விடயங்களும் இதன்போது பரிசோதிக்கப்பட்டு, தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக சில உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அவதானிக்கப்பட்ட சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு பணிக்கப்பட்டதுடன் கால அவகாசமும் வழங்கப்பட்டது.