வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் தமது வேட்புமனுக்களை இன்று சமர்ப்பித்துள்ளனர் எனவும், அவர்கள் 39 பேரும் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, சுயேச்சை வேட்பாளர் சரத் குமார குணரத்ன வேட்புமனுப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. நீதியான முறையில் தேர்தலை நடத்த வேட்பாளர்கள் ஒத்துழையுங்கள்.
தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்புமனுக்களில் 3 வேட்பு மனுக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மூன்றும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான மற்றும் வெறுப்பூட்டும் சித்தரிப்புக்களுடனான பிரச்சாரங்களை மேற்கொள்வதைச் சிவில் பிரஜைகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கும் ஊடகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
வேட்பாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்” – என்றார்.