கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்தில் வழிபட அனுமதி

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்துக்குச் சென்று வழிபட இன்று அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி சிறப்புப் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

கடந்த 34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஷ்ணர் ஆலய வழிபாடுகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டநிலையில் அங்கு சென்ற பொதுமக்கள் ஆலயத்தைச் சிரமதானம் செய்து பொங்கல் பொங்கி பூசை வழிபாடுகளை மேற்கொண்டனர்.

நீண்ட காலத்தின் பின்னர் தமது ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதை மிகவும் சந்தோசமாக வரவேற்ற பொதுமக்கள் ஆலயம் சிதைவடைத்திருப்பதைப் பார்த்துக் கடும் மனவேதனை அடைந்தனர்.

இதன்போது யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் ஶ்ரீமோகன், செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்துக்குச் சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிருஷ்ணர் ஆலயம் என்ற காரணத்தால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும் வழிபட பொதுமக்கள் அனுமதி கோரியதால் அது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பரிசீலிப்பதாகவும், வலிகாமம் வடக்கிலுள்ள ஏனைய காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply