இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அதிகாரம் வழங்காத எந்தவொரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன், அவ்வாறான நிலைப்பாட்டை நிராகரிப்பவர்கள் வடக்கு கிழக்கு மக்களிடம் வாக்கு கேட்க வரவேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (20.08.2024) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தென்னிலங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் வடக்கு கிழக்கு ஒன்றிணையக் கூடாதென்றும் அதிகாரப் பகிர்வுக்கு என்றுமே இடமில்லை என்றும் பொலிஸ் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநயகக் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மேலும் பதிலளிக்கையில் –
இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழருடைய அரசியலுரிமைப் பிரச்சினை அவ்வப்போது பேசப்பட்டுவந்தாலும் காலப்போக்கில் பல்வேறு ஒப்பந்தங்கள், பல்வேறு இணக்கப்பாடுகள் பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரும் அதில் முன்னேற்றங்கள் காணப்படாமையால் தரப்படுத்தலூடாக தமிழ் மக்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதப்போராட்டங்கள் தலைதூக்கி பல உயிர்த் தியாகங்கள், சொத்தழிவுகள், அங்கவீனங்கள், சொல்லொணாத் துயரங்களுக்கு பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண அரசு முறைமை கொண்டுவரப்பட்டது.
13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக கிடைத்த அந்த குறைந்த அதிகாரம் கொண்ட மாகாண முறைமைக்கு அதிகாரங்களோ அதிகாரப் பகிர்வோ வழங்க மறுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பிரசார நடவடிக்கைகளுக்கு வரத்தேவையில்லை. அவ்வாறான வேட்பாளர்களை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.