இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலத்தை நிா்மாணித்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடா்பில் மல்வத்து பீட மகாநாயக்கா் திப்படுவாவே சிறீ சுமங்கல தேரா் இந்திய உயா் ஸ்தானிகா் சந்தோஷ் ஜாவிடம் கேள்வி எழுப்பியுள்ளாா்.
பாலம் அமைக்கும் பணிகள் எவ்வாறு உள்ளன, அதனால் இலங்கையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுமா, கேரள கஞ்சா போன்ற பொருட்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு அது பயன்படுத்தப்படுமா என்று பல கேள்விகளை அவா் அடுத்தடுத்து இந்திய உயா் ஸ்தானிகரிடம் நேற்று தொடுத்தாா்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்து பௌத்த மதத் தலைவா்களைச் சந்தித்துப் பேசினாா். இதன்போது நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தல் தெடா்பாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்படவிருப்பது குறித்தும் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டது.
முதலில் மல்வத்து பீட மகாநாயக்கா் திப்பட்டுவாவேவ சிறி சுமங்கல தேரரை இந்திய உயா் ஸ்தானிகா் சந்தித்தாா். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்படுவதற்கான திட்டம் பற்றிக் குறிப்பிட்ட மகாநாயக்கா், “பாலம் அமைக்கும் பணி எவ்வாறுள்ளது? அதனால் இலங்கையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுப்பினாா்.
“இது இன்று நாளை நிறைவுபெறக்கூடிய ஒரு திட்டமல்ல” எனப் பதிலளித்த இந்திய உயா் ஸ்தானிகா் சந்தோஷ் ஜா, “இதனைத் திட்டமிடுவதற்கும் அது தொடா்பாகப் பேசுவதற்கும் இன்னும் இரண்டு வருடங்களாவது தேவைப்படும்” என்று குறிப்பிட்டாா்.
“இது ஒரு நீண்டகாலத் திட்டம்” என்றும் சுட்டிக்காட்டிய இந்திய உயா் ஸ்தானிகா் சந்தோஷ் ஜா, “இது இலங்கைக்கு பாதகமானது. இந்தியாவுக்கு சாதகமானது என்று சிலா் கூறுகின்றாா்கள். ஆனால் அது அவ்வாறு அல்ல” என்று விளக்கினாா்.
“இலங்கையுடன் இணைந்தே அனைத்துப் பணிகளும் முன்னெடுக்கப்படும்” என்றும், “இதன்மூலம் இலங்கைக்கு நிதி கிடைக்கும். பல திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்றும் மல்லத்து மகாநாயக்கருக்கு இந்திய உயா் ஸ்தானிகா் சந்தோஷ் ஜா விளக்கினாா்.
இதற்கு பதில் கேள்வி எழுப்பிய மல்வத்து மகாநாயக்கா், இலங்கையிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கு என்ன இருக்கின்றது? என்று கேட்டபோது பதிலளித்த இந்திய உயா் ஸ்தானிகா், “அன்பு இருக்கின்றது. அதனைக் கொண்டு செல்லலாம்” என்று பதிலளித்தாா்.
“இந்தியாவிலிருந்து பெருமளவு கேரள கஞ்சா கொண்டுவரப்படுகின்றது. வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் போது அது போன்றவை அதிகளவுக்கு இங்கு கொண்டுவரப்படுவதற்கு சந்தா்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துவிடும் அல்லவா?“ என்று மல்வத்து மகாநாயக்கா் அடுத்த வேள்வியைத் தொடுத்தாா்.
இதற்குப் பதிலளித்த இந்திய உயா் ஸ்தானிகா், “திருடா்கள் கதவின் ஊடாக வருவதில்லை. ஜன்னலுாடாக குதித்துத்தான் வருவாா்கள் என்று பழமொழி ஒன்றுள்ளது” என்று சுட்டிக்காட்டியதுடன், திருடா்கள் பாலம் கட்டப்பட்டிருப்பது என்பதற்காக சட்டபுா்வமாகக் கொண்டு வரப்போவதில்லை. பாலம் அமைக்கப்படுவதால் அவ்வாறு நடைபெறும் என்று சந்தேகிக்கப்படத் தேவையில்லை” என்று விளக்கினாா்.