வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளது என்று குழந்தையின் தந்தையால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் தெரிவிக்கும்போது,
“வவுனியா, செட்டிகுளம், பிரமனாலங்குளம் பகுதியில் வசிக்கும் நாம் எனது மனைவியைப் பிரவசத்துக்காகக் கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் அனுமதித்திருந்தேன். மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்திருந்தது. இதனைத் தாங்க முடியாத எனது மனைவி அங்குள்ள தாதி ஒருவருக்கு விடயத்தைத் தெரிவித்திருந்தார்.
இதன்போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு, அது தொடர்பாக கவனமெடுக்காமல் அது ஒரு பிரச்சினையுமில்லை என்று தெரிவித்திருந்தார். பின்னர் வலிக்குரிய மருந்தை மனைவிக்குக் கொடுத்துவிட்டு உறங்குமாறு அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மறுநாள் வைத்தியசாலைக்கு வந்த வைத்திய அதிகாரி ஒருவர் சீசர் செய்து குழந்தையை எடுத்திருக்கலாம்தானே எனக் கடமையில் இருந்த வைத்தியரைப் பேசியிருந்தார். பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு எனது மனைவியை சிகிச்சைக்கூடத்துக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
பலமணி நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதற்குள் 7ஆம் விடுதியில் குளிரூட்டி இயங்கவில்லை எனத் தெரிவித்து 5 ஆம் விடுதிக்கு எனது மனைவியை மாற்றியிருந்தனர். பின்னர் தாதி ஒருவர் தொலைபேசி அழைப்பை எடுத்து என்னை வைத்தியசாலைக்கு வருமாறு அழைத்திருந்தார். அங்கு சென்றபோது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் எனது குழந்தையை அனுமதித்திருந்தார்கள்.
அங்குள்ள வைத்தியரிடம் கேட்டபோது, “5 ஆம் விடுதியில் இருந்து குழந்தையை இங்கு அனுமதிக்கும்போதே உயிரில்லாத நிலைமையிலேயே தந்தனர். இருப்பினும் குழந்தையின் இதயத்துடிப்பை நாம் மீட்டுள்ளோம். எனினும், குழந்தையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” – என்று தெரிவித்து குழந்தையை எனக்குக் காட்டியிருந்தனர். பின்னர் நேற்று இரவு எனது குழந்தை இறந்துவிட்டது என்று தெரிவித்தனர்.
எனவே, வைத்தியர்களின் அசமந்தப்போக்கால் எனது மனைவிக்கு நடந்த கொடுமைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு நீதி கிடைக்காமல் நான் சிசுவின் சடலத்தைப் பொறுப்பெடுக்கமாட்டேன்.” – என்றார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக சிசுவின் தந்தையால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் சுகுணனிடம் கேட்டபோது, “இது குறித்து உள்ளக விசாரணை இடம்பெற்று வருகின்றது” – என்று தெரிவித்தார்.