லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தில் 138 பேர் பலியாகியுள்ள நிலையில் 4 000 பேருக்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர்.
வெடி விபத்து நிகழ்ந்த பெய்ரூட் துறைமுகத்தின் அருகிலுள்ள அஷ்ரஃபியா என்ற இடத்தில் இருந்த ஆரோம் மருத்துவமனையும் பலத்த சேதமடைந்தது.
அதோடு மருத்துவமனையில் பணியாற்றிய 4 நர்ஸ்கள் பலியாகினர். 200 நோயாளிகள் காயமடைந்தனர். வெடி விபத்தின் போது, மருத்துவமனையில் பணி புரிந்த நர்ஸ் ஒருவர் கையில் மூன்று பச்சிளம் குழந்தைகளை வைத்து கொண்டு உடைந்து சிதறிய ஜன்னல் அருகே நின்று போனில் பேசுவது போன்ற புகைப்படத்தை பிலால் மெரி ஜெவீஸ் என்ற போட்டோகிராபர் எடுத்தார்.
தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்ட பிலால் மெரி ஜெவீஸ்,
” தன் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூரமான சம்பவத்தை பார்த்ததில்லை இந்த நர்ஸ் தன் கையில் மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு யாருடனோ போனில் பேச முயற்சித்தார். என் 16 வருட கால புகைப்பட அனுபவத்தில் போர்க்களத்தில் கூட இது போன்ற காட்சியை காணவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் குழந்தைகளை காப்பாற்றிய நர்ஸின் புகைப்படம் வைரலாக பரவ உலக மக்கள் அந்த நர்சுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
‘எல்லா ஏஞ்சல்களுக்கும் இறக்கைகள் இருப்பதில்லை ‘என்றும் ‘ இந்த இக்கட்டான தருணத்திலும் இந்த நர்ஸால் எப்படி இவ்வளவு திறமையுடன் செயல்பட முடிந்தது ‘ எனவும் ‘மக்கள் கொரோனா என்ற கொடியவனிடம் சிக்கி தவிக்கும் இந்த ஆண்டில் சுகாதாரப் பணியாளர்கள்தான் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர் என்றும் பாராட்டு குவிந்து வருகிறது.