ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் அதன் பின்னரான 48 மணித்தியாலங்கள் மௌன காலப் பகுதியில் வேட்பாளர்களின் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான விரிவான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் இன்று 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதோடு, 19 ஆம் திகதி மற்றும் 20 ஆம் திகதி ஆகிய நாட்கள் மெனள காலமாக இருக்கும். இந்த காலப் பகுதியில் பரப்புரைகள் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்புரைகள் மேற்கொள்வதை தடை செய்வதற்கான பொறிமுறை இதற்கு முன்னரான தேர்தல்களில் பின்பற்றப்படவில்லை.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதை தடுப்பதற்கு அவற்றை முடக்கும் செயற்பாடுகள் சாத்தியமற்றதாக காணப்படுகின்றது. இதனால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து தேர்தல் பரப்புரைகளைத் தடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளன.
தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்தப் பரப்புரைகள் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக அதிகளவான அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் தேர்தல் மௌன காலப்பகுதியிலும் தேர்தல் பரப்புரைகள் மற்றும் வேட்பாளர்கள் மீதான அவதுறு பிரசாரங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் அவற்றை நீக்குவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது.
இக்காலப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுடன் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.