நாங்கள் இதுவரை எட்டு ஜனாதிபதிகளுக்கு வாக்களித்திருக்கின்றோம். வாக்களிக்கா விட்டாலும் பலதரப்பட்ட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம். அவை யாவும் வெற்றியளிக்காத நிலையிலேயே நான் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளேன் என தமிழ்ப் பொதுக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்க் கட்டமைப்பின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் கல்லடி மீனிசைப் பூங்காவில் இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:-
போர் மௌனிக்கப்பட 22 பன்னாட்டு இரானுவங்கள் உதவின. அவ்வாறு உதவும் போது அவர்கள் சில கோரிக்கைகளை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷயிடம் முன்வைத்திருந்தனர்.
அப்போது அவர்கள் இணைந்த வடக்குக் கிழக்கிற்கு தீர்வை வழங்குமாறு கோரியிருந்தனர். அதற்கு மஹிந்த சம்மதம் தெரிவித்திருந்தார். எனினும் எதுவும் நடக்கவில்லை. நாம் காலங்காலமாக ஜனாதிபதித் தேர்தல்களில் பலரை ஆதரித்தும் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசினோம். வாக்குறுதியளித்தார்கள். எதுவுமே செய்யவில்லை.
இவ்வாறான நிலையில்தான் அவர்களுக்கு ஓர் பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்த் தேசிய கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.
45 பேரை எடுத்து அதிலிருந்து இறுதியாக என்னைத் தெரிவு செய்தனர். நான் ஜனாதிபதியாக வர முடியாது. எனினும் நீங்கள் சங்குச் சின்னத்துக்கு அளிக்கும் வாக்கு உங்களுக்கான வாக்காகவே அமையும். எனவே நீங்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்வரும் 21 ஆம் திகதி சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து சர்வதேசத்துக்கு எமது ஒற்றுமையின் பலத்தைக் காட்டுங்கள் என்றார்.
இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.ஸ்ரீநேசன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம்,முன்னாள் மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா,அரசியல் ஆய்வாளர் எஸ்.நிலாந்தன் மற்றும் சமயத் தலைவர்கள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.