தமிழ்த் தேசியம் பேசுவோர் ஏன் பொது வேட்பாளரை எதிர்க்கின்றார்கள்? – ஐங்கரநேசன் கேள்வி

தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிகழுகின்ற நிலையில் அவர்களுக்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் இடையூறாக இருக்கிறார். ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகின்ற சிலரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் மீது வசைபாடுகின்றனர். யானை பார்த்த அந்தகர்களைப் போன்று, தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதன் தார்ப்பரியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அரசியல் அந்தகர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து இணுவில் அண்ணா சனசமூகநிலைய முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘தமிழ்ப் பொதுவேட்பாளர் இந்தியாவின் ஆலோசனையின் பேரில் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்த அரசியல் அந்தகர்கள் விமர்சிக்கின்றார்கள். எதற்கெடுத்தாலும் இந்தியாவைக் குற்றம் சாட்டும் மனோநிலையில் உள்ள அரசியல் அந்தகர்களின் விமர்சனமே இது. இதுவரையில் இந்தியா தமிழ்ப் பொதுவேட்பாளருக்குச் சாதகமான கருத்துகள் எதனையும் எங்கும் தெரிவித்திருக்கவில்லை. மாறாக, கொழும்பு அரசியலில் தலையீடு செய்ய விரும்பும் எந்தவொரு வெளிநாட்டு அரசியல் சக்திக்கும் பொதுவேட்பாளர் என்பவர் இடையூறாகவே அமைவார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் ரணில் வி;க்கிரமசிங்கவை வெல்ல வைப்பதற்காகவே நிறுத்தப்பட்டுள்ளார் என சஜித் பிரேமதாசாவுக்கு வாக்குக் கேட்டுத் திரியும் தமிழ் அரசியல் வாதிகள் விமர்சிக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவாகச் செயற்படுவதாயின் இந்த அரசியல்வாதிகளைப் போன்றே ரணிலிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பொதுவேட்பாளரை நிறுத்தாமல் நேரடியாகவே அவருக்குப் பிரச்சாரத்தை செய்திருக்கமுடியும். தமிழ்ப் பொதுவேட்பாளர் யாரோ ஒருவரின் வெற்றி வாய்ப்பைப் பாதிப்பார். அதற்காக யாரோ ஒருவரின் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பார் என்று கூறுவது அபத்தமானது’ என்றும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply