10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நாளில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் நடைபெறுவதால் அன்றையநாள் மிகவும் விசேடதினதாகும்.
முதலாவது அமர்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகின்றது.
முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன் விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
செங்கோல் வைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக சபையில் முன்னெடுக்கப்படும்.
அதன் பின்னர் அரசியலமைப்பின் 64(1) உறுப்புரை மற்றும் நிலையியற் கட்டளை இலக்கம் 04, 05 மற்றும் 06 ஆகியவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் சபாநாயகரை வாக்களிப்பின் மூலம் நியமித்தல், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதியுரை வழங்கப்படும்.
இதனையடுத்து பிரதி சாபாநாயகர், குழுக்களின் தலைவர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்படுவர்.
பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட் உறுப்பினர்கள் அனைவரும் முதலாவது பாராளுமன்ற நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் அட்டவணை எனும் புத்தகத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்.
இதில் சபாநாயகர் முதலில் கையொப்பமிடுவார் என்பதுடன் அடுத்து பிரதமர் கையொப்பமிட்டதும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிடுவது சம்பிரதாயமாகும்.
இந்த செயற்பாடுகள் பூர்த்தியடைந்ததும் முதல்நாள் அமர்வுகள் ஒத்திவைக்கப்படுவதுடன் அடுத்த பாராளுமன்ற அமர்வு நாள் அறிவிக்கப்படும்.
எனினும் அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் அன்றையதினம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்படுமாயின், முதல் நாளின் பிரதான பணிகள் நிறைவடைந்ததும் தற்காலிகமாக சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குத் தலைமைதாங்கி கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்த முடியும்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார்.
மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவுசெய்யப்படும் 29 உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும்.