2024 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி காலை 10:30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் களனி ஆற்றுப் படுகையின் பல தாழ்வான பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல், கலா ஓயா படுகையின் பல தாழ்வான பகுதிகளுக்கு 2024 நவம்பர் 29 ஆம் திகதி காலை 9:30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் மற்றொரு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (27) காலை 8.00 மணி நிலவரப்படி கலா ஓயா படுகையின் மேல் நீரோடை மற்றும் நடுத்தர நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சில இடங்களில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் ராஜாங்கனை நீர்த்தேக்கம் தற்போது 10000 கனஅடி/வினாடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த நிலைமை மற்றும் கலா ஓயாவில் உள்ள நீரியல் நிலையங்களின் ஆற்று நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், நொச்சியாகம, ராஜாங்கனை, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள கலா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதேவேளை, களனி ஆற்றுப் படுகையின் பெரும்பாலான மத்திய மற்றும் கீழ் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி நிலவரப்படி கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
களனி ஆற்றின் நீரியல் நிலையங்களின் தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் ஆற்று நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ மற்றும் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.