புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிந்துஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதற்கமைய நாட்டின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணாகவும் இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராகவும் முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

பிரதம நீதியரசராக செயற்பட்ட ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்றதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முர்து பெர்னாண்டோவின் பெயர் அரசியலமைப்பு பேரவையால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.

1985ஆம் ஆண்டில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்துகொண்ட அவர், 1997ஆம் ஆண்டில் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014ஆம் ஆண்டில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவியுயர்வு பெற்றுக்கொண்டார்.

முர்து பெர்னாண்டோ அரச சட்டத்தரணியாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து 30 வருடங்களுக்கும் அதிக காலம் கடமையாற்றியுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

அவர் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றியதுடன், உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் சிரேஷ்ட நீதியரசருமாவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply