அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தவறினால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தொடரும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நீண்டகால மூலோபாயத்தின் அவசரத் தேவையை சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க வலியுறுத்தினார்.
“எதிர்கால நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக முறையான திட்டமொன்று ‘யாலப் பருவத்தில்’ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய பற்றாக்குறையை குறைப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக அரிசியை இறக்குமதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகள் முக்கியமானவை” என்று அவர் கூறினார்.
நாட்டின் உணவுப் பாதுகாப்பில் அதன் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பீர் உற்பத்தி மற்றும் கால்நடை தீவனத்தில் பயன்படுத்தப்படும் அரிசியின் கடுமையான கட்டுப்பாடுகளின் அவசியத்தையும் சேமசிங்க எடுத்துரைத்தார்.
கலந்துரையாடலுக்கு மேலதிகமாக, முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மீள் நடவு செய்ய பரிந்துரைத்தார்.